ஆழித் தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது

Jan 25, 2024, 3:02 PM IST

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும் பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் பங்குனி உத்திரத் திருவிழாவின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோச்சகர் சன்னதிக்கு அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்தர் புறப்பாடு சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது.

இதனையடுத்து தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட ஐந்து பனஞ் சப்பைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள்  உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.