Jan 18, 2024, 1:11 PM IST
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5ம் படை கோயிலாகும். இந்த திருக்கோயிலில் காணும் பொங்கலை முன்னிட்டு வருடத்திற்கு ஒரு முறை உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் மலைக் கோயிலில் இருந்து திருத்தணி நகரத்திற்கு வீதி உலா புறப்பட்டு எழுவதற்கும் மேற்பட்ட வீதிகளில் திருத்தணி நகரத்தில் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் வீடுகள் அருகில் சென்று முருக பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.
இதனைத் தொடர்ந்து சண்முக தீர்த்த குளம் அருகில் உள்ள மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். சிறப்பு தீப ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் அபிஷேகங்கள் நடைபெற்றதால் திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.