170 ஆடுகள் வெட்டப்பட்டு ஆண்களுக்கு மட்டும் கம கம கறி விருந்து; நாமக்கல்லில் விநோத திருவிழா

Jul 31, 2023, 1:22 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் பொங்களாயி‌ அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாவெட்டி, பொங்கல் விழா நடைபெறும். விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாவெட்டி தங்களது காணிக்கைகளை அம்மனுக்கு படைத்து வருகின்றனர். 

அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த (21.07.23) அன்று பூச்சாட்டுகளுடன் துவங்கியது. முன்னதாக பொங்களாயி அம்மன் சுவாமி மற்றும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்து படையல் மற்றும் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது.  கிடாக்களை சுவாமிக்கு முன் பூஜை செய்து பலி கொடுக்கப்பட்டு பின்னர் வெட்டப்பட்ட ஆடுகளை அங்கே சமைத்து அதிகாலையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சமபந்தி விருந்து நடைபெறும். 

சமபந்தி விருந்தில் 177 கிடாக்கள் வெட்டப்பட்டு 500 கிலோக்கும் மேலான அரிசியை பொங்கல் வைத்து அதனை உருண்டையாக செய்து ஆண்கள் மட்டுமே சமபந்தி விருந்து நடைபெற்றது. சமபந்தி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 200 வருடங்களுக்கு முன்பு திருவிழா சமயத்தில் கனமழை பெய்ததால் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்ததாகவும் இதனால் பெண்கள் விழாவில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது. இந்த கோவிலில் வேண்டுதல் வைத்தால் திருமண தடை நீங்கும், என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.