உலக புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி 18 பெருக்கை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்தியும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்க தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றும் விதமாக கோவில் உட்பிரகாரத்தில் தங்க தேரை இழுத்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.