Oct 17, 2023, 9:58 AM IST
நவராத்திரியை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விரதமிருந்து தெய்வங்கள், மனிதன், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றை களிமண்ணாலான பொம்மைகளாக, கொலுவாக அடுக்கி வைத்து நாள்தோறும் பூஜை செய்வது வழக்கமாகும். அதே போல கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்தாண்டு நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வருகின்ற 23ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 24-ஆம் தேதி விஜயதசமி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் 5 அடுக்குகளாக அருகருகே 5 இடங்களில் வண்ண வண்ண பொம்மைகளால் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய பொம்மைகள் இடம்பெற்றுள்ளது.
பக்தர்கள் கொலுவை பார்த்து வழிபடும் வகையில் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.