Sep 10, 2019, 1:39 PM IST
கோவை மாவட்டம் சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜ் மகன் அரவிந்த தினேஷ். இவருக்கு திருமணமான 15 நாட்களிலேயே தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
பிரியதர்ஷினி தந்தை வீட்டிற்குச் சென்றதால் அதனை தொடர்ந்து அரவிந்த தினேஷ் திருமண வலைதளத்தில் பதிவு செய்து கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவரை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போன்றே இவரையும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்நிலையில், மூன்றாவது திருமணம் செய்வதற்காக அவர், திருமண வலைத்தளத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் இரண்டு மனைவிகளுக்கும் தெரியவரவே பிரியதர்ஷினி, அனுப்பிரியா குடும்பத்தினர் இது குறித்து அரவிந்த தினேஷிடம் விசாரிக்கையில், அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.தொடர்ந்து பிரியதர்ஷினியும் அனுப்பிரியாவும் சேர்ந்து சூலூரில் உள்ள அரவிந்த தினேஷின் தந்தை சௌந்தர்ராஜை அழைத்துக் கொண்டு அரவிந்த தினேஷ் பணியாற்றிவரும் தொழிற்சாலைக்குச் சென்று அவரை வெளியே அனுப்பும்படி கேட்டுள்ளனர். அதற்கு நிறுவன நிர்வாகம் வெளியே அனுப்ப மறுத்ததால் இருவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அரவிந்த தினேஷ், அவரது இரண்டு மனைவிகளையும் சூலூர் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றனர்.அப்போது நிறுவனத்திலிருந்து வெளியேவந்த அரவிந்த தினேஷை அவரது இரு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.