Sep 23, 2022, 10:45 AM IST
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.பெரியபட்டி பிரிவு சாலையில் திருச்சி ஓலையூரைச் சேர்ந்த வினோத் என்பவர் உணவகம் மற்றும் டீக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம் போல் கடை ஊழியர்கள் கடை மூடிவிட்டு சென்று விட்டனர். கடையின் உள்ளே இரவு நேர பாதுகாவலர் சபரி என்பவர் கடையின் உள்ளே இருந்ததால் கடையை பூட்டாமல் சட்டரை மட்டும் கீழே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர் கடையை நோட்டம் விட்டுள்ளார். சத்தம் கேட்டு பாதுகாவலர் சபரி எழுந்து வந்து பார்த்தபோது மர்ம நபர் மறைவான இடத்தில் ஒழிந்து கொண்டார். பின்னர் சபரி சென்றவுடன் கடையின் உள்ளே நுழைந்த கொள்ளையன் கல்லா இருந்த பகுதிக்குச் சென்று ஒவ்வொரு கல்லாவையும் திறந்து பார்த்துள்ளான். கீழே ஒரு கல்லாவில் வைக்கப்பட்டு இருந்த முந்தைய நாள் விற்பனை பணமான ரூ. 47 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
கடையின் ஊழியர் ஆறுமுகம் நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது கடையின் கல்லாவில் விறகு வாங்க வைத்திருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் கடையின் உள்ளே கொள்ளையன் நுழைந்து பணத்தை திருடி விட்டு மீண்டும் வெளியே தேசிய நெடுஞ்சாலையை நோக்கி ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து கடை மோலாளர் எட்வின்ராஜ் மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது சிசிடிவியில் கொள்ளையன் ஓடும் அதே வழியில் மோப்பநாயும் சிறிது தூரம் நெடுஞ்சாலையில் ஓடிச்சென்று திரும்பியது. சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் கடையில் உள்ளே நுழைந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.