Dec 5, 2019, 3:12 PM IST
இந்தியாவில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன்காரணமாக பல பெண்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கற்பனைகளுக்கு எட்டாத வகையில் நிகழ்கிறது. இவற்றை தடுப்பதற்கு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஆபாசம் பார்ப்பவர்களின் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஆபாச படம் பார்த்தவர்களின் பட்டியலை பெயர் வாரியாக தயார் செய்து வைத்திருக்கும் காவல்துறை, அவர்களை விரைவில் கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக கூறிய கூடுதல் டிஜிபி ரவி, ஆபாச படம் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், பரப்பியவர்கள் என அனைவரின் பெயர்களும் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். தற்ப்போது ஆபாச வீடியோ பார்த்த 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது விரைவில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அப்பட்டியல் அனுப்பப்பட்டு ஆபாச படம் பார்த்தவர்கள் கைதாக கூடும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஆபாசபடங்கள் பார்த்தவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்பதால் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே இதுசம்பந்தமான விவாதங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி இருக்கின்றன.