Actor Bala : மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி தொடர்ச்சியாக அளித்து வரும் நடிகர் பாலா அவர்கள், சென்னை மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது கையில் இருந்த அனைத்து பணத்தையும் செலவழித்து உதவியது அனைவரும் அறிந்ததே.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோர்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தான் பாலா, தற்போது வெள்ளித் துறையிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கியுள்ளார். சட்டென கவுண்டர் அடிக்கும் அவருடைய துடிப்பான பேச்சு, மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம். ஆனால் அதைவிட இப்பொழுது பிரபலமாக உள்ள ஒரு விஷயம் தான் அவர் பொது மக்களுக்கு செய்து வரும் உதவிகள்.
ஏற்கனவே பல மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ்களை அவர் வாங்கி பரிசளித்து வருவது பலர் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொருவருடைய வீடு தேடி சென்று ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்தார் நடிகர் திரு. பாலா. அரசியல் தலைவர்கள் பலரும் பாலாவின் இந்த செயலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார் அவர். இது குறித்து பாலாவிடம் மனு கொடுத்த வெறும் பத்து நாட்களில் அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர் அமைத்து கொடுத்ததற்காக கிராம மக்கள் தற்பொழுது அவருக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா அவர்கள், செங்கல்பட்டு அருகே உள்ள அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு. ராஜேஷ் அவர்கள் தங்கள் ஊரில் ஒரு பிரச்சனை இருக்கிறது அதை சரி செய்து தர முடியுமா? என தன்னிடம் கேட்டதாக அவர் கூறினார்.
என்னையும் மதித்து இந்த ஊர் மக்கள் ஒரு மனுவை எழுதி அதில் பலர் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பியது என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அப்பகுதியில் வரும் தண்ணீரை குடிப்பதனால் பலருக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதாகவும் நான் கேள்விப்பட்டேன். மேலும் இதனை எத்தனை நாட்களில் முடிக்க முடியும் என்று யோசித்தேன், உடனே அவர்களுக்கு உதவ எண்ணி தற்பொழுது இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்துள்ளேன் என்றார் அவர்.
'பிச்சைக்காரன்' பட ஹீரோயின்... சட்னா டைட்டசுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!