யமஹா இந்தியா நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் புதிய இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
யமஹா நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது விற்பனையாளர்களுக்கு 'Block Your Date' அழைப்பிதழ்களை அனுப்பி வருகிறது. இந்த நிகழ்வு ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அழைப்பிதழில் யமஹா ஸ்டைலிஷ், ஸ்போர்டியான புது எதிர்காலத்தை காட்சிப்படுத்தப் போவதாக குறிப்பிட்டு இருக்கிறது.
அதன்படி யமஹா புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய வாகனத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தவும் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த டீசர் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இது எலெக்ட்ரிக் வாகனமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் யமஹா நிறுவனம் Neo's உள்பட மேலும் சில எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்தது. இது 50சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரில் பேட்டரி மாற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முழு அம்சங்கள், இதன் ரேன்ஜ் உள்ளிட்டவைகளை யமஹா இதுவரை அறிவிக்கவில்லை.
இதுதவிர யமஹா நிறுவனம் தனது இந்திய விற்பனையாளர்களுக்கு MT-15 யூனிட்களை அனுப்புவதை நிறுத்தியது. கடந்த சில மாதங்களாக யமஹா MT 15 யூனிட்கள் கிடைப்பதே கடினமாக உள்ளது என பல விற்பனையாளர்கள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், ஏப்ரல் 11 ஆம் தேதி நிகழ்வில் யமஹா புதிய MT15 மாடலை அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.