பல்வேறு காரணங்களுக்காக பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ட்விட்டரில் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் இன்று மீண்டும் அமலுக்கு வருகிறது. இதன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
டுவிட்டர் தளத்தில் பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமுகர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் எனப்படும் சரிபார்ப்பு குறியீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த ப்ளூ குறியீடை கட்டண அடிப்படையில் சாதாரண பயனர்களும் பெறலாம் என்று எலான் மஸ்க் அறிவித்தார். அதோடு நடைமுறைக்கும் கொண்டு வந்தார்.
ஆனால், பல்வேறு போலி டுவிட்டர் கணக்குகள், போலியான பெயரில் ப்ளூ டிக் வாங்கத் தொடங்கிவிட்டன. அவ்வளவு ஏன் எலான் மஸ்க் பெயரிலேயே போலி கணக்குகள் வந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக முக்கிய நிறுவனங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, தவறான டுவீட்கள் பதிவிடப்பட்டதால் டுவிட்டருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. விளம்பரதாரர்கள் விலகினர். நிறுவனங்கள் கடுமையாக சாடின. இதனையடுத்து ப்ளூ டிக் வழங்கும் திட்டம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.
undefined
இந்த நிலையில், தற்போது சாதாரண பயனர்களும் டுவிட்டர் ப்ளூ டிக் சப்ஸ்கிருப்ஷன் பெறும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள், அந்த டிக்கை தக்கவைக்க நீல சந்தாவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று ட்விட்டர் முன்பு கூறியது. ப்ளூ சந்தாவில் இணைய $8 (தோராயமாக ரூ. 660) மற்றும் ஐபோன்களுக்கு $11 (தோராயமாக ரூ. 900) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரைப் பொறுத்தவரையில், ஆப்ஸ் டெவலப்பர்கள் ஆப்பிளுக்கு 30 சதவீத கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளதால், அதை ஈடுகட்டும் வகையில் ஆப்பிளின் இயங்குதளங்களில் ப்ளூ டிக் கட்டணம் விலை அதிகமாக உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் ஐபோன் மற்றும் இணையதள பதிப்பல் ப்ளூ டிக் சந்தாவை சோதிப்பதால், ஆண்ட்ராய்டு தளத்தில் விலை விவரங்கள் தெளிவாக இல்லை. ட்விட்டர் ப்ளூ சந்தாவை ஆண்ட்ராய்டிலும் அதிக விலையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ப்ளூ டிக் பேட்ஜைப் பெற விரும்பும் பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை சரிபார்க்க வேண்டும் என்று ட்விட்டர் கூறுகிறது. கடந்த முறை ப்ளூ சந்தா வெளியிடப்பட்டபோது பல ஸ்பேம் மற்றும் பகடி சுயவிவரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இம்முறை டிவிட்டர் நிறுவனம் உஷாராக இந்த பாதுகாப்பு ஏற்பாடை அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ளூ சந்தாவில் வழக்கத்தை விட சில மேம்பட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, குறைவான விளம்பரங்கள் (50 சதவீதம் குறைவு), சுயவிவரங்கள், இடுகைகள் ஆகியவை டுவிட்டர் தளங்களில் சிறப்பாகக் காட்டப்டும் வசதி, நீண்ட வீடியோக்களை இடுகையிடும் திறன் ஆகியவை வழங்கப்படுவதாக ட்விட்டர் கூறுகிறது.