இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முழு சார்ஜ் செய்தால் 165 முதல் அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.
இந்தியாவில் காற்று மாசு மூலம் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுவது பற்றி பலரும் விவரம் அறிந்து உள்ளனர். இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடும் என்பதில் பொது மக்கள் கவனமாக உள்ளனர். 2022 ஆண்டு வாக்கில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகின்றன.
பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கி வரும் நிலையில், எந்த நிறுவன மாடலை வாங்கலாம் என பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதள விவரங்களின் படி பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், பொது மக்கள் அதிக ரேன்ஜ் வழங்கும் மாடலை வாங்கே விரும்புகின்றனர் என தெரியவந்துள்ளது.
அந்த வகையில் இந்திய சந்தையில் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். இந்த ஸ்கூட்டர்கள் முழு சார்ஜ் செய்தால் 165 முதல் அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.
4 - ஹீரோ Nyx Hx:
இந்திய சந்தையில் ஹீரோ Nyx Hx எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 62 ஆயிரத்து 954 ஆகும். இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஹீரோ Nyx Hx இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 42 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
3 - ஓலா S1 ப்ரோ:
ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2 - சிம்பில் ஒன்:
பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் சிம்பில் ஒன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் இன்னும் வினியோகம் செய்யப்படவில்லை. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.
1 - கிராவ்டன் குவாண்டா:
புதிய குவாண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோவாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இது இந்தியாவின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.