டீப்சவுத் (DeepSouth) என்று அழைக்கப்படும் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை சிட்னியில் இருக்கும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் நியூரோமார்பிக் அமைப்புகளுக்கான சர்வதேச மையத்தின் (ஐசிஎன்எஸ்) ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
சைன்ஸ் பிக்ஷன் படங்ஙளிலும் நாவல்களிலும் கம்ப்யூட்டர்களும் மனித அறிவாற்றலை மிஞ்சுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். எதிர்கால கண்டுபிடிப்புகள் எப்படி மனித மூளைக்கு நிகராக இருக்கும் என்று பல கதைகள் சித்தரித்துள்ளன.
கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டிருக்கும் இதுபோன்ற கற்பனை, ஆஸ்திரேலியாவில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் அடுத்த ஆண்டு நிஜமாகவுள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மனித மூளையைப் போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைவான சக்தியை மட்டுமே பயன்படுத்தி, மனித மூளை எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல திறம்பட செயல்படும் என்று சொல்லப்படுகிறது.
சிட்னியில் இருக்கும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் நியூரோமார்பிக் அமைப்புகளுக்கான சர்வதேச மையத்தின் (ஐசிஎன்எஸ்) ஆராய்ச்சியாளர்கள் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர். மனித மூளையின் திறனுக்கு ஈடாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர் டீப்சவுத் என்று அழைக்கப்படுகிறது.
எக்கச்செக்க பணத்தைக் கொட்டி எலான் மஸ்க் தொடங்கும் STEM பல்கலைகழகம்!
இந்த சூப்பர் கம்ப்யூட்டரின் சிப்களில் ஸ்பைக்கிங் நியூரல் நெட்வொர்க்குகள் உள்ளன. இந்த புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இன்டெல் மற்றும் டெல் நிறுவனங்கள் கைகொடுத்துள்ளன. இதன் மூலம் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மனித மூளை எவ்வாறு தகவல்களைக் கையாளுகிறதோ அதேபோல செயல்படும் என்று கூறப்படுகிறது.
டீப்சவுத் உயிரியல் செயல்முறைகளைப் பிரதிபலிக்கும் நியூரோமார்பிக் அமைப்பைப் பயன்படுத்துகிறது எனவும் இதில் உள்ள ஸ்பைக்கிங் நியூரான்களின் நெட்வொர்க்குகள் வினாடிக்கு 228 டிரில்லியன் சினாப்டிக் ஆபரேஷன்களைத் திறம்பட மேற்கொள்ளும் எனவும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் சொல்கிறது. இது மனித மூளையின் செயல்பாட்டுத் திறனுடன் போட்டியிடுகிறது என்றும் கூறுகிறது.
"DeepSouth மற்ற சூப்பர் கம்ப்யூட்டர்களில் இருந்து தனித்து நிற்கிறது. இது நியூரான் நெட்வொர்க்குகள் போல செயல்படும் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளுக்கு குறைந்த அளவு சக்தியே தேவைப்படுகிறது. ஆனால், அதிக திறன்களை செயல்படுத்துகிறது" ஆய்வாளர் ஆண்ட்ரே வான் ஷேக் சொல்கிறார்.
"இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மூளையைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதோடு, சென்சிங், பயோமெடிக்கல், ரோபாட்டிக்ஸ், விண்வெளி மற்றும் பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளையும் மேம்படுத்த உதவும்" என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
நாங்க நினைச்சது நடக்கும் வரை உக்ரைனுக்கு அமைதி கிடையாது! ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்