ShareChat நிறுவனத்திலும் ஆட்குறைப்பு.. அடுத்தடுத்து பெருநிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு!

By Dinesh TGFirst Published Jan 16, 2023, 10:49 PM IST
Highlights

அமேசான், கூகுள் என பெருநிறுவனங்களில் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ஷேர்சாட் நிறுவனத்திலும் சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் கடினமான காலத்தை கடந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஐடி துறை பெரும் பணிநீக்கங்களைச் சந்தித்தது, அந்த நிலைமை இந்த 2023 ஆண்டில் இன்னும் மோசமாகிவிடும் என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமேசான் நிறுவனத்தின் சிஇஓ அண்டி ஜேசி 18000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். அமேசானில் பணிநீக்கங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, பல இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், அமேசானுக்குப் பிறகு, சமூக ஊடக தளமான ஷேர்சாட் 20 சதவீத பணியாட்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. கூகுள் ஆதரவு பெற்ற சமூக ஊடக நிறுவனமான ஷார்சாட் திங்களன்று இந்த பணிநீக்கங்களை அறிவித்தது. மேலும், ஷேர்சாட் மற்றும் Moj தளத்தில் சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஷேர் ஷாட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில். "ஒரு நிறுவனமாக இதுவரையில் இல்லாத வகையில் நாங்கள் மிகவும் கடினமான, வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது, இந்த ஆரம்ப பயணத்தில் எங்களுடன் இருந்த திறமையான ஊழியர்களில் சுமார் 20 சதவிகிதத்தை விட்டுவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மூலதனம் விலை உயர்ந்ததாக இருப்பதால், நிறுவனங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மேலும், அதிக பலன் கொடுக்கும் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 

Vodafone நிறுவனத்தில் விரைவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்?

ஷார்சாட் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணிநீக்க ஊதியத்தை அறிவித்துள்ளது. இந்த ஊதியத்தில் அடங்குபவை: நோட்டீஸ் காலத்திற்கான மொத்த சம்பளம், நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வருடத்திற்கான 2 வார ஊதியம், டிசம்பர் 2022 வரையிலான ஊதியம் மற்றும் ஜூன் 2023 வரை செயலில் இருக்கும் உடல்நலக் காப்பீட்டுத் தொகை ஆகியவை அடங்கும்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள், லேப்டாப்கள், ESOPs உள்ளிட்ட சில அலுவலக சொத்துக்களை ஏப்ரல் 30, 2023 வரை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள், மேலும் 45 நாட்கள் வரை பயன்படுத்தப்படாத விடுப்பு அப்படியே சம்பளமாக மாற்றி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
 

click me!