தென்கொரியாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங் நிறுவனத்திற்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அந்தவகை ஸ்மார்ட்போன்களை
திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், சாம்சங் நிறுவனத்தின் கனடா உற்பத்தி மையம் தயாரித்த சலவை இயந்திரத்திலும் கோளாறு உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்திய 9 பேர் காயமடைந்தது உள்ளிட்ட 733 புகார்கள் எழுந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சாம்சங் நிறுவனம், கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரையில் உற்பத்தி செய்யப்பட்ட 20 மாடல் சலவை இயந்திரங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 2,55,000 சலவை இயந்திரங்களைத் திரும்பப் பெறுவதாக சாம்சங் தெரிவித்துள்ளது. சலவை இயந்திரத்தினுள் இருக்கும் ட்ரம்கள் எனப்படும் உருளைகள் அதிகப்படியான அதிர்வுகளை ஏற்படுத்துவதாக அந்த நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனால் சரிவைச் சந்தித்த சாம்சங் நிறுவனத்துக்கு சலவை இயந்திரம் பிரச்னையும் பெரிய பின்னடைவைத் தரும் என்று கூறப்படுகிறது.