ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் யுனிஃபைடு ஓ.எஸ். வழங்கப்படலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் ஒப்போ நிறுவனத்துடனான கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து புதிதாக யுனிஃபைடு ஓ.எஸ். வெளியிடப்படும் என்றும் ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது. சீன சந்தையில் ஒன்பிளஸ் ஏற்கனவே ஹைட்ரஜன் ஒ.எஸ்.-க்கு மாற்றாக கலர் ஓ.எஸ். வழங்க துவங்கிவிட்டது.
யுனிஃபைடு ஓ.எஸ். உருவாக்கப்பட்டு வருவதால் சர்வதேச சந்தையில் இதுபோன்ற மாற்றங்களுக்கு மேலும் சில காலம் ஆகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் ஒன்பிளஸ் தனது யுனிஃபைடு ஓ.எஸ்.-ஐ வெளியிடும் என கூறப்படுகிறது. இந்த ஓ.எஸ். கூகுளின் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் அறிமுகம் செய்யும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் யுனிஃபைடு ஓ.எஸ்.-உம் அறிமுகம் செய்யப்படலாம். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் தற்போது அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா மற்றும் யுனிஃபைடு ஒ.எஸ். ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10 அல்ட்ரா மாடலில் வழக்கமான ப்ரோ வேரியண்டில் வழங்கப்படுவதை விட மேம்பட்ட கேமராக்கள், அதிவேக பிராசஸர், சிறப்பான ஹார்டுவேர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புது அல்ட்ரா ஸ்மார்ட்போன் பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய அல்ட்ரா மாடலில் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவனங்களின் அதிவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.