இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 5ஜி சேவை நிகழ்வில், ஜியோ, வோடஃபோன் ஐடியா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் டெமோ குறித்து எந்த தகவலும் வரவில்லை.
இந்தியாவில் இன்று அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாடு தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி 5ஜி சேவை அறிமுகம் செய்கிறார். பல ஆண்டுகள் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவை இன்று அறிமுகம் செய்யப்படுவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி விளம்பரங்களை செய்து வருகின்றன.
இந்த மாநாட்டில் 5ஜி சேவையை அனுபவிக்கும் வகையில் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜியோ தரப்பில் பூத் 3.3 அரங்கு அமைக்கப்பட்டு, ஜியோவின் 5ஜி சேவையை அனுபவித்து பாருங்கள் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதே போல் வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் தரப்பிலும் பூத் அமைக்கப்பட்டுள்ளது. 5ஜி ஏலத்தில் குறைவான அலைக்கற்றையை வாங்கினாலும், வோடபோன் ஐடியாவும் தனது வாடிக்கையாளர்களுக்காக, ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து கிளவுட் கேமிங் 5ஜி டெமோவை வழங்குகிறது.
5ஜி போன்களை 10,000 ரூபாய்க்கு வழங்க வாய்ப்பில்லை.. சியோமி தலைவர்..!
ஆனால், ஏர்டெல் தரப்பில் இதுவரையில் எந்த சத்தமும் இல்லாமல் உள்ளது. ஏர்டெலுக்கு அரங்கு 3.2 ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக ஏர்டெல் தனது டுவிட்டர் பக்கத்தில் எந்த விளம்பரமும் செய்யாமல் உள்ளது. இதனால் ஏர்டெலின் டெமோ எப்படி இருக்கும் என்று இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. வழக்கமாக எந்தவொரு அம்சங்களானாலும் ஏர்டெலின் விளம்பரம் அதிகளவில் இருக்கும். எள் என்று சொன்னாலே எண்ணெய் என்று விளம்பரம் செய்யும் ஏர்டெல் நிறுவனமானது, இம்முறை 5ஜி டெமோ குறித்து சத்தமே இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
Airtel 5G வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! புதிதாக 5ஜி சிம் வாங்கத் தேவையில்லை!!
இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் அதிகாரப்பூர்வ தளமான https://www.indiamobilecongress.com/ பக்கத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புகள் குறித்து முழுமையான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோவின் டெமோ திட்டங்களும், 5ஜி ஏற்பாடுகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே 5ஜி ஏலத்தில் அதிகளவிலான உரிமத்தை ஜியோ பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.