இந்திய சந்தையில் வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்கலில் சிட்ரோயன் முன்னணி பிராண்டாக இருக்கும் என டவாரெஸ் தெரிவித்தார்.
ஸ்டெலாண்டிஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தைக்கான எலெக்ட்ரிக் வாகனங்கள் யுக்தி பற்றி பேசும் போது இது பற்றிய அறிவிப்பை ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் டவாரெஸ் தெரிவித்தார்.
“சிட்ரோயன் குழுமத்திற்கான ஸ்மார்ட் கார் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகன வெர்ஷன்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்திய சந்தையில் வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்கலில் சிட்ரோயன் முன்னணி பிராண்டாக இருக்கும்,” என டவாரெஸ் தெரிவித்தார்.
விலை விவரம்:
பெட்ரோல், டீசல் கார் மாடல்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் 40 முதல் 50 சதவீதம் வரை விலை அதிகமாக உள்ளன. இந்த நிலையில், சிட்ரோயன் எலெக்ட்ரிக் மாடல்களை நடுத்தர மக்களும் வாங்கி பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு டவாரெஸ் பதில் அளிதிதார். அப்போது, “எங்கள் வினியோகஸ்தர்களுடனான பணி இது, கூடுதல் உற்பத்தி கட்டணங்களை தவிர்த்து, விலை அதிகரிக்காமல் செய்து, நடுத்தர மக்களும் இந்த காருக்கு பணம் செலுத்த வைக்க வேண்டும். இதன் காரணமாக காம்பேக்ட் கார் மாடல்கள் மட்டும் இன்றி எம்.பி.வி. மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் வெளியாக இருக்கும் முதல் சிட்ரோயன் எலெக்ட்ரிக் மாடல் என்ற பெருமையை சிட்ரோயன் C3 EV பெறும் என கூறப்படுகிறது. இது சப்-4 மீட்டர் ஹேச்பேக் மாடல் ஆகும். அடுத்த மாதம் சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு கன்வென்ஷனல் மாடல் அறிமுகம் ஆவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு வாக்கில் இதன் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிளாட்பார்ம்:
சிட்ரோயன் C3 கார் மாட்யுலர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்பார்மில் காம்பேக்ட் கிராஸ் ஓவர் அல்லது எஸ்.யு.வி. மற்றும் 7 சீட்டர் எம்.பி.வி. மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த மாடல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த கார்களின் எலெக்ட்ரிக் வேரியண்ட்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்திய சந்தைக்கான மாடல்களை அறிமுகம் செய்வதோடு மட்டும் இன்றி 90 சதவீதம் வரை உள்நாட்டு பாகங்களை இந்த காரில் பயன்படுத்த ஸ்டெலாண்டிஸ் முடிவு செய்து இருக்கிறது. இதுவரை இத்தகைய இலக்கை எட்ட வினியோக திறன் இல்லை, எனினும் இந்த நிலை விரைவில் மாறும் என ஸ்டெலாண்டிஸ் தெரிவித்து உள்ளது.