டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விவரங்கள் புதிய டீசர்களில் தெரியவந்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடலை மார்ச் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புது மாடலுக்கான டீசர்களை டொயோட்டா நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதில் கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி சமீபத்திய டீசரில் புது கிளான்சா முன்புறம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய முன்புற கிரில், பம்ப்பர், ஹெட்லைட் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கேம்ரி மாடலில் உள்ள அம்சங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெளிவாக தெரிகிறது. இதுதவிர புதிய கிளான்சா மாடலில் 16 இன்ச் அலாய் வீல்கள் மாருதி பலேனோவில் வழங்கப்பட்டதை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. எனினும், இதன் கேபின் பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
புதிய டீசரில் டொயோட்டா கிளான்சா மாடல் 360 டிகிரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், பெரிய 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, டெலிமேடிக்ஸ்-ஒன்லி கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆர்கமிஸ் டியூன் செய்த சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆப்ஷனல் 5-ஸ்பீடு AMT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய கிளான்சா மேனுவல் மற்றும் AMT வேரியண்ட்கள் லிட்டருக்கு முறையே 22.3 கிலோமீட்டர் மற்றும் 22.9 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது.
புதிய டொயோட்டா கிளான்சா மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிய கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐந்து வித நிறஹ்கள் மற்றும் நான்கு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் டொயோட்டா கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 6.5 லட்சம் முதல் துவங்கும் என தெரிகிறது.
அறிமுகம் செய்யப்பட்டதும் இந்திய சந்தையில் புதிய கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடல் டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுசுகி பலேனோ மாடல்களுக்கு போட்டியாக அமையும்.