இமெயிலை கண்டுபிடித்த தமிழர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதிலிருந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளான ஊழியர்களின் பணி நீக்கம், ப்ளூ டிக் விவகாரம், போலி கணக்குகளின் தடை என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டர்:
கடந்த வாரம் எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில், 'நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா ? உங்கள் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்' என்று பதிவிட்டிருந்தார். இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் ஆம் என்றும், சுமார் 42.5 சதவிகிதம் பேர் இல்லை என்றும் பதிவிட்டுருந்தனர்.
இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!
எலான் மஸ்க் ட்வீட்:
பிறகு அடுத்த பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன். அதன்பின், சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன் என்று பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இமெயிலை கண்டுபிடித்த தமிழர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் சி.இ.ஓ:
இதுதொடர்பாக சிவா அய்யாதுரை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அன்புள்ள எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். எம்.ஐ.டியிலிருந்து 4 பட்டங்களை பெற்றுள்ளேன். 7 வெற்றிகரமான உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியுள்ளேன். விண்ணப்பிக்கும் செயல்முறையை தயவுசெய்து அறிவுறுத்துங்கள். இப்படிக்கு சிவா அய்யாதுரை' என்று பதிவிட்டார்.
யார் இந்த சிவா ஐயாத்துரை?:
சிவா ஐயாத்துரை மும்பையில் பிறந்த தமிழர். ஏழு வயதிலேயே இவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார். நியூ ஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் மேல்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இவர் மின்னஞ்சல் இயக்கம் குறித்து நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்திற்காக பணியாற்றினார். சிவா ஐயாத்துரையின் அப்பா, ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.
அம்மா, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அடுத்த, பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர். இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராப்ட், ஃபோல்டர், அட்ரஸ் புக் அடங்கிய அடங்கிய மின்னஞ்சல் இயக்கத்தை கண்டுபிடித்து சாதித்துள்ளார். ஆனால், இன்றளவும் தனக்கான உரிய அங்கீகாரம் தரப்படவில்லை என்று பல்வேறு நேர்காணல்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!