Twitter நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், எலான் மஸ்க் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த வாரம் டுவிட்டரை விலைக்கு வாங்கினார். டுவிட்டரை கைப்பற்றிய உடனேயே அதில் சிஇஓ, சிஎஃப்ஓ என உயர்பதவியில் இருந்தவர்களை பணி நீக்கம் செய்தார். மேலும், டுவிட்டரில் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்து, வேலைகளை கடுமையாக்கினார்.குறிப்பிட்ட நாளுக்குள்ளாக பணிகளை முடிக்கவில்லை எனில், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே டுவிட்டரில் பணிபுரியும் சுமார் 3,738 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸில் செய்தி வெளியானது. இது காட்டுத்தீ போல் பரவிய நிலையில், எலான் மஸ்க் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
எரிக் உமான்ஸ்கை என்பவர் இந்தச் செய்தியை குறிப்பிட்டு, பணியாளர்களுக்கு இந்த ஆண்டிற்கான போனஸை வழங்குவதற்கு முன்பாகவே, எலான் மஸ்க் அவர்களை பணி நீக்கம் செய்வது உறுதி என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இது தவறான செய்தி என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.
This is false
— Elon Musk (@elonmusk)
டுவிட்டரின் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளே பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மற்ற இன்ஜினியர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஏற்கெனவே, டுவிட்டரில் ப்ளூ டிக் குறியீடை கட்டண அடிப்படையில் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
Twitter Blue Tick பெறுவதற்கு கட்டணமா? குறை கூறுபவர்களுக்கு Elon Musk பதிலடி!
மேலும், இந்தப் பணிகளை நவம்பர் 7 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டுவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு பல அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாரோ என்ற அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் டுவிட்டர் பணியாளர்கள் உள்ளனர்.