குஜராத், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க ரூ. 20 ஆயிரம் வரை மாணியம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இன்னும் ஒரே ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மாறி விடும் சூழல் ஏற்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார். இது மட்டும் இன்றி பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் எனும் மூலப் பொருளை உபயோகிக்கும் முயற்சியை அரசு பரிசோதனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
பசுமை எரிபொருள்களை மத்திய அரசு மிகத் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இதோடு, “சாலை போக்குவரத்தை விட நீர் வழி போக்குவரத்து செலவு குறைவானது ஆகும். வரும் காலங்களில் நீர் வழி போக்குவரத்து முறை கணிசமான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கிறோம்,” என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மாணியம்:
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மாணியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி டெல்லி மாநிலத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் வரை மாணியம் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தப் படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரை மாணியம் வழங்கப்படுகிறது.
இதே போன்று குஜராத், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க ரூ. 20 ஆயிரம் வரை மாணியம் வழங்கப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலதங்களில் முறையே ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மாணியம் வழங்கப்படுகிறது. உத்திர பிரதேசம், கேரளா, தமிழ் நாடு, தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு எந்த மாணியமும் வழங்கப்படவில்லை.
பொது மக்களுக்கு சன்மானம்:
முன்னதாக பொது இடங்களில் நோ பார்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு அதிகபட்சம் ரூ. 500 வரை சன்மானம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.