உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்கு 25 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுவதாக மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கத்தாரில் நடந்து வரும் FIFA உலகக் கோப்பை 2022 போட்டியைத் தொடர்ந்து, எந்த இடையூறும் இல்லாமல் ஸ்ட்ரீம் செய்ய அனைத்து மொபைல் நெட்வொர்க்குகளுக்கும் 50 ஜிபி டேட்டா திட்டங்களை இலவசமாக வழங்கப்படுவதாக சில இணையதள இணைப்புகள் வைரலாகி வருகின்றன. அதை கிளிக் செய்தால், கால்பந்து போட்டிக்கான புகைப்படங்கள் உள்ளது.
மேலும், அந்த இணையதளங்களில் ‘எல்லா மொபைல் நெட்வொர்க்குகளுக்கும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டு, அதை பெறுவதற்கு இங்குக் க்ளிக் செய்யுங்கள் என்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே, சிலர் ‘எனக்கு கிடைத்துவிட்டது’ என்று கமெண்ட் செய்தது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த இணையதளங்களைப் பார்க்கும் பலரும், உண்மை என்று நம்பி விடும் அளவுக்கு அழகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
உண்மை என்னவெனில், FIFA உலகக் கோப்பை 2022 என்ற பெயரில் 50 GB இலவச டேட்டா திட்டங்களை வழங்கும் இந்த இணையதளங்கள் அனைத்தும் மோசடியானவை. இந்த சந்தேகத்திற்குரிய இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்தால், நீங்கள் ஆஃபருக்குத் தகுதியானவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும், அதற்கு உங்கள் மொபைல் எண் விவரங்களை வழங்குமாறு பயனர்களிடம் கேட்கப்படும். இது முழுக்க முழுக்க மோசடி ஆகும். இந்த இணையதளங்கள் மக்களுக்கு எந்த இலவச டேட்டா திட்டங்களையும் வழங்கவில்லை.
Airtel, Jio 5ஜி சேவைகள் கூடுதலாக சில நகரங்களில் அமல்!
இதற்கு முன்பு கொரோனா ஊரடங்கின் போது ஜியோ நிறுவனம் 25 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை வழங்குவதாக சமூக ஊடகங்களில் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய செய்திகள் பகிரப்பட்டது. அப்போது, பல செய்தி இணையதளங்கள் அவற்றை மோசடி என்று நிரூபித்து செய்திகளாகப் கட்டுரைகளை வெளியிட்டன. அதே போல இதுவும் மோசடி மெசேஜ் தான். இதை நம்பி யாரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.
ஜியோ சலுகைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் 'MyJio' செயலிலோ அல்லது அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ வெளிப்படையாகக் கிடைக்கும். அரசாங்கத்தின் பெயரில் இலவச மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கும் இதே போன்ற சந்தேகத்திற்குரிய இணையதளங்களை பார்த்த உடனே நம்ப வேண்டாம். அதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்வது நலம்.