இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்கள் இப்போது iOS 16.2 மென்பொருள் அப்டேட் மூலம் 5G சேவையை அனுபவிக்கலாம். இந்த அப்டேட் iPhone SE 3 (2022), iPhone 12, iPhone 13 மற்றும் iPhone 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கொண்டு வரப்பட்டுள்ளன
இந்தியாவில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. ஐபோன்களில் 5G ஐச் செயல்படுத்துவது எளிது, ஆனால் 5ஜி செலவு மற்றும் செட்டிங்ஸ் குறித்து பலருக்கும் பல கேள்விகள் உள்ளன. இந்த கட்டுரை இந்தியாவில் ஐபோன்களில் 5G பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஐபோன்களில் 5ஜியை எவ்வாறு செயல்படுத்துவது
5G சேவையை ஆன் செய்வதற்கு முன்பாக, ஐபோன் பயனர்கள் தங்கள் போனில் iOS பதிப்பு 16.2 உள்ளதா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில், அப்டேட் செய்யவும். இதற்கு அமைப்புகள் > பொது > மென்பொருள் புதுப்பிப்பு என்பதற்குச் செல்லவும். அப்டேட் செய்யப்பட்டதும், அமைப்புகள் > மொபைல் டேட்டா > மொபைல் டேட்டா ஆப்ஷன்கள் > வாய்ஸ் மற்றும் டேட்டா > 5G அல்லது 5G ஆட்டோ என்பதற்குச் சென்று 5G ஆன் செய்ய வேண்டும்.
5G ஐப் பயன்படுத்துவது பேட்டரி ஆயுளைப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே பேட்டரியைச் சேமிப்பதற்கு, 5G ஆட்டோ முறையைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஜியோ பயனர்கள் 5G ஸ்டாண்டலோன் ஆப்ஷனையும் பார்க்கலாம், இது 5G இன் முழு திறனையும் வழங்கும். ஏர்டெலைப் பொறுத்தவரையில் 4ஜி நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்ட நான்-ஸ்டாண்டலோன் 5ஜியைப் பயன்படுத்துகிறது.
5G Available Cities : நாடு முழுவதும் 50 இடங்களில் 5ஜி சேவை!
இந்தியாவில் 5G எங்கே கிடைக்கும்?
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபட், குருகிராம், குவஹாத்தி மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் ஏர்டெல் 5ஜி சேவைகள் கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோவைப் பொறுத்தவரையில்,டெல்லி-என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, நாத்வாரா மற்றும் குஜராத் (33 மாவட்டங்கள்) ஆகிய இடங்களில் 5ஜி கொண்டு வந்துள்ளது. Vi வோடபோன் ஐடியா தற்போதைக்கு 5G சேவைகளை இன்னும் வெளியிடவில்லை.
இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி விலை
ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி சேவைகள் இந்தியாவில் தற்போதைக்கு சோதனை முறையில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கென 5ஜி சிம் கார்டு தேவையில்லை. 5ஜி ரீசார்ஜ் பிளான்களும் அறிவிக்கப்படவில்லை