ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை சீராக இயங்கவில்லை என நாடு முழுக்க பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நாடு முழுக்க ஏர்டெல் பயனர்கள் அதன் சேவையை பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர். பிராட்பேண்ட் மற்றும் செல்லுலார் பயனர்கள் என நெட்வொர்க் முழுதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. சேவை முடங்கியதை அடுத்து ஏர்டெல் பயனர்கள் சமூக வலைதளங்ளில் தங்கள் புலம்பல்களை பதிவிட்டு வருகின்றனர்.
இண்டர்நெட் அவுடேஜ் டிராக்கர் டவுன்-டிடெக்டர் இதே தகவலை உறுதிப்படுத்தி இருப்பதோடு, நாடு முழுக்க ஏர்டெல் பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது. இந்த பிரச்சினை இன்று காலை 11 முதல் ஏற்பட துவங்கி இருக்கிறது. ஏர்டெல் சந்தாதாரர்களில் பலர் இதுபற்றி டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பிராட்பேண்ட் மற்றும் செல்லுலார் சேவைகள் முடங்கியுள்ள நிலையில், சிலருக்கு ஏர்டெல் செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ஏர்டெல் கூறும் போது நெட்வொர்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது என தெரிவித்து இருக்கிறது. மேலும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டு விட்டதாக ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.
"தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எங்களின் இணைய சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சேவைகள் முழுமையாகசரி செய்யப்பட்டுவிட்டன. எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்," என ஏர்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இணைய சேவைகள் முடங்கியதை அடுத்த டுவிட்டரில் #AirtelDown எனும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.