இன்று சனிப் பெயர்ச்சி. சனி பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சனி பரிகாரம் செய்து கொள்ள விரும்பும் அன்பர்கள், அருகில் உள்ள சிவன் கோயில்களில் இருக்கும் சனைச்சரர் சன்னிதியில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில். அங்கேதான், சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. சனிப் பெயர்ச்சி நாளான இன்று அங்கே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. நள தீர்த்த குளத்தில் முங்கி, சனி பகவானை வணங்கி வருவதை பலரும் வாடிக்கையாக கொண்டிருப்பர்.
undefined
திருநள்ளாறு செல்ல இயலாத சென்னை வாசிகளுக்காக, இங்கேயே வடநள்ளாறு தலம் ஒன்று உள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே உள்ளது பொழிச்சலூர். இங்கேதான் புராண வரலாறு கொண்ட, மிகப் பழைமையான அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கே பெருமானுக்கு அகஸ்தீஸ்வர் என்று திருநாமம். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி.
இந்தத் தலத்தில் சனீஸ்வரருக்கு தனியாக சந்நிதி அமையப் பெற்றுள்ளது. வடநள்ளாறு என்று புகழ் பெற்ற இந்தத் தலத்தை சென்னையின் நவக்கிரகத் தலங்கள் எனும் தொகுப்பில், சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக வைத்திருக்கிறார்கள்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு, கால பைரவ மூர்த்தம். சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்று பைரவ மூர்த்தி. இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பைரவர், ஆக்ரோஷம் பெற்ற சம்ஹார கால பைரவராக வீற்றிருக்கிறார்.
சனியின் தொல்லைகளைக் களைவதில் பைரவமூர்த்திக்கும் முக்கிய இடம் உண்டு. எனவே, இந்தத் தலத்தில் சனி பகவானுக்கு அமைந்துள்ள தனி சந்நிதியில் பெருமானை வணங்கி, அருகில் உள்ள நள தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு அர்ச்சனை செய்து வணங்கி வரலாம்.