இருக்குற சாராயக் கடை போதாது என்று புது சாராயக் கடையா? எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆட்சியரிடம் மனு...

First Published Dec 19, 2017, 9:00 AM IST
Highlights
people condemned New tasmac petition to collector


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கனவே இருக்கும் சாராயக் கடை போதாது என்று புதிய சாராயக் கடைகள் திறக்க முயற்சிப்பதை தடுக்க கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ளது பொன்னன்விடுதி. இங்கு புதிதாக சாராயக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து முதற்கட்டமாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவெடுத்தனர்.

அதன்படி, புதுக்கோட்டை ஆட்சியகரத்தில் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பொன்னன்விடுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதி கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே அப்பகுதியில் ஒரு சாராயக் கடை இயங்கிவரும் நிலையில், மக்கள் வசிப்பிடப் பகுதிக்குள் மீண்டும் ஒரு சாராயக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.

எனவே, இந்தப் பகுதியில் சாராயக் கடை திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!