
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிக்கு வரும் தொழிலாளர்கள் உணவு கொண்டு வர அனுமதிக்காத நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்டது விஜயகோபாலபுரம் கிராமம். இங்கு தனியாருக்குச் சொந்தமான எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலைொன்று உள்ளது.
இங்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிரந்தர தொழிலாளர்களாக 600-க்கும் மேற்பட்டோரும், பயிற்சி தொழிலாளர்களாக 400-க்கும் மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே அங்குள்ள உணவகத்தில் சாப்பிட முடியுமாம். மற்ற நபர்கள் தங்களது வீட்டில் அல்லது வெளியில் உணவு சாப்பிட்டு வர வேண்டும் என்று ஆலை நிர்வாகத்தின் விதிமுறை வகுத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி தொழிலாளர் ஒருவர் மதிய உணவு சாப்பிட நேரமில்லாமல் பணிக்கு வந்தபோது, வெளியிலிருந்து சாப்பாடு வாங்கிக்கொண்டு தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது, நுழைவுவாயிலில் பணியில் இருந்த பாதுகாவலர், சாப்பாடு எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது என்று கூறி அந்த சாப்பாட்டை பிடுங்கிக் கொண்டாராம். இதனால், அந்த ஊழியருக்கும், பாதுகாவலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த 500-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் உணவு எடுத்து வர அனுமதிக்க வேண்டும் என்று கோரி பணியைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 15-ஆம் தேதி தொழிலாளர்கள் சிலர் திருச்சியில் உள்ள தொழிலாளர் நல அலுவலர்களிடம் இதுகுறித்த தகவலைத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஐந்து பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மேற்கண்ட பிரச்சனை தொடர்பான புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பின்னர், முற்றுகையிட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.