நீலகிரியில் கால் டாக்சிகளை இயக்க அனுமதிக்கக் கூடாது - சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்...

First Published Dec 19, 2017, 8:04 AM IST
Highlights
Do Not Allow Called Taxi Drivers in Nilgiris - Travel Vehicle Drivers Strike ...


நீலகிரி

நீலகிரியில் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான கால் டாக்சிகளை இயக்க அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கால் டாக்சிகளை இயக்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால் சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நீலகிரியில் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான கால் டாக்சிகளை இயக்க அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஊட்டியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடங்களான சேரிங்கிராஸ், ஏ.டி.சி., ராஜீவ்காந்தி ரௌண்டானா உள்பட பல்வேறு இடங்களில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

மேலும், வாகனங்களை ஓட்டுனர்கள் இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களை காணச் செல்ல கார், வேன் போன்ற வாகனங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

இதனிடையே தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான கால் டாக்சிகளை இயக்க அனுமதிக்கக் கூடாது.

சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் காப்பீட்டு வரி, சாலை வரி உள்ளிட்டவற்றை அரசுக்கு தவறாமல் செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது, தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்பவர்கள் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

நீலகிரி முழுவதும் உள்ளூரில் உள்ள சுற்றுலா வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை. எனவே, வாகனங்களை நிறுத்த மேலும் பல இடங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

மேக்சிகேப் வாகனங்களுக்கு காவலாளர்கள் அடிக்கடி அபராதம் விதித்து வருவதால் மேக்சிகேப் வாகனங்களை இயக்கவே ஓட்டுனர்கள் பயப்படுகின்றனர். மேக்சிகேப் வாகனங்களில் இருக்கைகளை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலை காரணமாக வைத்து, தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு மேக்சிகேப் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே, உள்ளூர் மேக்சிகேப் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

கல்லட்டி மலைப்பாதையை தவிர, பிற பகுதிகளில் சமன் சாலையாக உள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தை சற்று அதிகரித்து இயக்க அனுமதிக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் 500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

click me!