
நாமக்கல்
நாமக்கல்லில் வேலைக்கு போக சொன்னதால் பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த தந்தையை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டு வலசு, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (26). இவர் ஒரு விசைத்தறித் தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனலட்சுமிக்கு கடந்த 6-ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
நேற்று முன்தினம் இரவு தனலட்சுமியுடன் பச்சிளம் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்பதால் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தனலட்சுமி தனது கணவர் பூபதியிடம் தெரிவித்துள்ளார். பூபதியும், தனலட்சுமியும் குழந்தையை தேடினர். ஆனால், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
பின்னர், குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று குழந்தை காணாமல் போனது பற்றி பூபதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் காவலாளர்கள் பூபதி வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பிறகு, பூபதியை தனியாக அழைத்துச் சென்று காவலாளர்கள் விசாரணை நடத்தியதில், வீட்டில் தனலட்சுமியுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பூபதி தூக்கிச்சென்று தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு குழந்தையை காணவில்லை என்று கூறி நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த பூபதியை காவலாளர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பூபதியிடம் காவலாளர்கள் மேலும் நடத்திய விசாரணையில், "விசைத்தறி தொழிலாளியான பூபதி திருமணத்திற்கு முன்பே வேலைக்குச் சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். எனவே பூபதியை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் அவர் திருந்தவில்லை.
இதன்பின்னர் பூபதிக்கும், தனலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகும் பூபதி வேலைக்கு செல்லாமல் இருந்தார். அப்போதும் பெற்றோர் அவரை கண்டித்தனர். பெண் குழந்தை பிறந்துள்ளது, இப்படி ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாயே? குழந்தைக்கு பால் வாங்க பணத்திற்கு எங்கு செல்வாய்? என்று கேள்வி கேட்டுள்ளனர்.
மேலும், பூபதி ஏற்கனவே வேலைபார்த்த விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் ஒருவர் பூபதியை சந்தித்து வேலைக்கு வருகிறாயா? பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாயே என்று அறிவுறுத்தியுள்ளார்.
தான் வேலைக்கு செல்லாமல் இருப்பதை பார்த்து பெற்றோர் கண்டிக்கிறார்கள் என்று குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லையே என்று திட்டுகிறார்கள் என்று ஆத்திரம் அடைந்த பூபதி குழந்தையை கொலை செய்ய துணிந்தார்.
எனவே, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தனலட்சுமியுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்சென்று அருகில் உள்ள ஒருவரது வீட்டின் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். தனலட்சுமி தூங்கி எழுந்து குழந்தையை தேடியபோது தானும் தனலட்சுமியுடன் சேர்ந்து குழந்தையை தேடுவது போல் நாடகமாடி உள்ளார்.
காவலாளர்களின் தீவிர விசாரணையை நடத்தியபோது பூபதி தனது குழந்தையை கொன்றது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக காவலாளர்கள் அனுப்பி வைத்தனர்.