
பெரம்பலூர்
பெரம்பலூரில், பூச்சிக் கொல்லியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கேட்டு இளைஞர்கள் இருவர் பிணம் போல வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தபோது, விவசாயிகள் நால்வர் சமீபத்தில் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரும், விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக அமைப்பினர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் மனு அளித்தும், ஆர்ப்பாட்டம், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,
பி.டி. ரக பருத்தியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.
பாலித்தீன் பைகளை தடை செய்ய வேண்டும்.
மரங்களின் மீது விளம்பர பதாகை அடிப்பதை தடை செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த ராகவன், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகியோர் பிணம் போல வேடமணிந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முயன்றனர்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிலர் மனு அளிக்க சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி, இந்த வேடத்தில் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று மறுப்புத் தெரிவித்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்யாணி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர், அவர்களிடன் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மனுவை பெற்றுக்கொண்டு அந்த இரண்டு இளைஞர்களையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.