
பெரம்பலூர்
தழுதாழை கிராமத்தில் உள்ள மரச்சிற்ப கலைஞர்களின் வாழ்க்கை மேம்படவும், சிற்பத் தொழில் வளர்ச்சி அடையவும் புதிய மரச்சிற்ப தொழிற்கூடம் அமைக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்தார்.
தமிழ்நாடு பூம்புகார் கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழகத்தின் மூலம், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தழுதாழையில், மரச்சிற்பம் செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய தொழிற்கூடம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வேப்பந்தட்டை வட்டத்துக்கு உள்பட்ட தழுதாழை கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மரச்சிற்பம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தச் சிற்பங்கள் உலகளவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இச்சிற்பங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் வசதிக்காக, தமிழ்நாடு பூம்புகார் கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் புதிய தொழிற்கூடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தழுதாழை கிராமத்துக்குச் சென்ற ஆட்சியர் வே.சாந்தா மரச்சிற்ப தொழிற்கூடம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு, அங்குள்ள மரச்சிற்ப தொழிலாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், சிட்கோ சார்பில் மரச்சிற்பக் கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை பார்வையிட்டு, அங்கு தொழிற்கூடம் அமைக்க இடங்கள் உள்ளதா என பார்வையிட்டார் ஆட்சியர்.
அப்போது அவர் கூறியது:
“தழுதாழை கிராமத்தில் சிற்பங்கள் செய்யும் தொழில் வளர்ச்சி அடைவதற்கும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் தமிழ்நாடு பூம்புகார் கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன், புதிய மரச்சிற்ப தொழிற்கூடம் அமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வருவாய் வட்டாட்சியர் பாரதிவளவன் ஆகியோர் உடன் இருந்தனர்.