
பெரம்பலூர்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மருத்துவ படிப்பில் சேர மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். தி.மு.க. மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீட் தேர்வினால் தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், தி.மு.க. நகரச் செயலாளர் பிரபாகரன் உள்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் துரைசாமி நன்றித் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் செய்திருந்தனர்.