
திருச்சி
குடிநீர் கேட்டு இராசிபுரம் கிராம பெண்கள் சரக்கு லாரிகளில் ஆட்சியரகம் வந்திறங்கி வெற்றுக் குடங்களை தலையில் சுமந்தபடி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ராஜாமணி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் முசிறி தாலுகாவிற்கு உட்பட்ட செயங்கொண்டம் அருகே உள்ள இராசிபுரம் கிராம மக்கள் மூன்று சரக்கு வாகனங்களில் கையில் வெற்றுக் குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர்.
அவர்கள் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், "கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வருவதில்லை. ஆழ் குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே, பழுதான ஆழ் குழாய் கிணற்று மோட்டாரை சரி செய்து குடிதண்ணீர் வழங்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.
முன்னதாக ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கும் முன்பு சரக்கு லாரிகளில் இருந்து குடங்களுடன் இறங்கிய பெண்கள் வெற்றுக் குடங்களை தங்களது தலையில் சுமந்தபடி குடிநீர் கேட்டு முழக்கமிட்டனர்.