
தேனி
வைகை அணையை தேசிய புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். வைகை அணை காவல் நிலையத்தையும் ஆய்வு செய்து காவலாளர்கள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. இங்கிருந்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட குடிநீருக்கும் அப்பகுதியில் உள்ள 1 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்டேர் விவசாய நிலங்களுக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.
வைகை அணையின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு வருடமும் தேசிய புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்வது வழக்கம். அதனடிப்படையில் நேற்று தேசிய புலனாய்வு படையினர் அணையை ஆய்வு செய்தனர்.
4 பேர் கொண்ட தேசிய புலனாய்வு படை குழுவுக்கு மேஜர் பினு தலைமைத் தாங்கினார். அப்போது அணைப் பகுதியில் மதகு, சுரங்கப் பகுதி, நீர்தேக்கப் பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும், நுண்புனல் மின்சாரம் தயாரிக்கும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதேபோல வைகை அணை காவல் நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டு, அங்குள்ள காவலாளர்கள் எண்ணிக்கை மற்றும் பல்வேறு விபரங்களை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் செல்வம், குபேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.