
கோயில் கருவறைக்குள் சென்று அம்மன் சிலையில் இருந்த தாலி மற்றும் வெள்ளி கொடியைத் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக அம்பாள் அரசாட்சி செய்து வரும் கோயில் என்று பக்தர்காளால் நம்பப்படுகிறது. செண்பகவல்லி அம்மனின் சிலை, மதுரை மீனாட்சி அம்மன் சிலைத் தோற்றத்தோடு ஒத்திருக்கும்.
இந்த கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல், அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்டது. செண்பகவல்லி அம்மனுக்கு பூஜையை முடித்த அர்ச்சகர், அடுத்த சந்நதியில் உள்ள சுவாமிக்கு பூஜை செய்ய சென்றார்.
இந்த நேரத்தில் பக்தர்போல வந்த ஒரு பெண், செண்பகவல்லி அம்மன் கருவறைக்குள் நுழைந்தார். பின்னர், சிலையில் அணிவிக்கப்படிருந்த தாலி, பொட்டு, வளையல், கம்மல், மூக்குத்தி, வெள்ளிகாப்பு, வெல்லி கொலுசுகளை திருடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சகர், இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த பெண்ணை கோயில் ஊழியர்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், அவரிடம் இருந்த தங்கம்
மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில்,, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த அருள்செல்வம் என்பவரின் மனைவி சண்முகசுந்தரி என்றும், தற்போது நெல்லையில் உள்ள செட்டிக்குளத்தில் வசித்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பெண் மீது, ஏற்கன பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செண்பகவல்லி அம்மன் சிலையில் இருந்து
நகை திருடிய சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.