
நாமக்கல்
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாமக்கல்லில் மகளிர் காங்கிரசு வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட மகளிர் காங்கிரசு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வி தலைமைத் தாங்கினார். மேற்கு மாவட்டத் தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். மாநில மகளிர் காங்கிரசு தலைவர் ஜான்சிராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில், “தமிழகத்தில் பேருந்து கட்டணம் அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் படிப்படியாக டாஸ்மாக் சாராயக் கடைகளை குறைப்பதாக கூறிய தமிழக அரசு புதியதாக கடைகளை திறந்து வருகிறது. எனவே, டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரசு தலைவர் ஷேக் நவீத், முன்னாள் தலைவர்கள் செழியன், சுப்பிரமணியன், மாவட்ட செயலர் சித்திக், நகர காங்கிரஸ் தலைவர் மோகன், மகளிர் காங்கிரசு நிர்வாகிகள் ராணி, ஜீவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.