
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில், உரிமையாளர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போதே ஒரு பொட்டு சத்தம் கூட வராமல் கதவை உடைத்து 10 சவரன் நகை, ரூ.37 ஆயிரம் ரொக்கம் திருடிச் சென்ற மர்ம கும்பலை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், அசேசம் ஊராட்சி, ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர் க. சபரிநாதான். இவர், மன்னார்குடியில் பெரியக்கடைத் தெருவில் கடை ஒன்றை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, சபரிநாதன், குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது,வீட்டின் பின்பக்க கதவை ஒரு பொட்டு சத்தம் கூட வராமல் உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
பின்னர், பீரோவில் இருந்த 10 சவரன் நகை, ரூ.37 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 புதிய கை கடிகாரங்களை திருடிச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோதுதான் தனது வீட்டில் திருடுப் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் சபரிநாதன். பின்னர், அலறி அடித்து கொண்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மன்னார்குடி காவலாளர்கள் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.