தமிழ் மீது அக்கறை இருக்கு சொல்றீங்க! அப்படினா தமிழ்வழிக்கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? அன்புமணி கேள்வி.!

By vinoth kumar  |  First Published Jan 2, 2024, 1:07 PM IST

தமிழ் பயிற்றுமொழி, தமிழ் கட்டாயப் பாடம் ஆகிய பெருங்குறைகளை சரி செய்யாமல், தமிழ் மன்றங்களை மேம்படுத்துவதாலோ, தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை ஏற்படுத்த முடியாது. 


தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;-  தமிழ்நாட்டில் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தவும்,  ஆண்டுக்கு மூன்று முறை தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை நடத்தவும்  ஒரு பள்ளிக்கு  ரூ.9000/- வீதம் மொத்தம்  ரூ. 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.  தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது  மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

Latest Videos

இதையும் படிங்க;- ஊழல் குற்றச்சாட்டில் பெரியார் பல்கலை. துணை வேந்தர் கைது.! பணி நீக்கம் செய்யாதது ஏன்.? - ராமதாஸ் கேள்வி

தமிழ் மொழியின் தொன்மை, இலக்கிய வளம், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் குறித்து மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, தமிழை மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க ஆர்வம் காட்டவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடிக்க முடியும் என்பது மட்டுமின்றி, பட்டமும் பெற முடியும் என்ற நிலை தான் இன்று வரை நீடிக்கிறது. தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்குவதற்கான சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட அந்த சட்டம் இன்று வரை நடைமுறைக்கு வராதது  நல்வாய்ப்புக் கேடானது.

இந்தியாவின் பல மாநிலங்களில் அம்மாநிலத்தின்  தாய்மொழி தான் கட்டாயப் பயிற்று மொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக 101 தமிழறிஞர்கள்  சென்னையில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம்  மேற்கொண்டனர். அதற்காக ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதை செயல்படுத்த முடியவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அரசு பள்ளிகளில்  ஆங்கிலவழிக் கல்வியை  அறிமுகம் செய்த அவலம் தமிழ்நாட்டில் தான் நடந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழ் பயிற்றுமொழி, தமிழ் கட்டாயப் பாடம் ஆகிய பெருங்குறைகளை சரி செய்யாமல், தமிழ் மன்றங்களை மேம்படுத்துவதாலோ, தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை ஏற்படுத்த முடியாது. தமிழில் பயிற்றுவிப்பதன்  மூலமாகவும்,  தமிழை படிக்கச் செய்வதன்  மூலமாகவும் மட்டும் தான் மாணவர்களையும்,  தமிழையும் இரண்டறக் கலக்கச் செய்ய முடியும். எனவே, உச்சமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக நடத்தி தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும்; அதேபோல்,  தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!