இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

By Manikanda Prabu  |  First Published Jan 2, 2024, 12:07 PM IST

இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்


பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய அவரை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்ற பிரதமர் மோடி, அப்பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சிறந்த மாணவர்களுக்கு விருதுகளையும் பிரதமர் மோடி அப்போது வழங்கினார்.

அதன்பிறகு, மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்தது எனவும், 2024ஆம் ஆண்டி இது தனது முதல் பொது உரையாடல் எனவும் தெரிவித்தார். அழகான தமிழகம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த பிரதமர், பட்டமளிப்பு விழாவில் இங்கு வரும் பாக்கியம் பெற்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக தெரிவித்தார். பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் கூறினார்.

Latest Videos

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் ஒரு புதிய நம்பிக்கையுடன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் உலகிற்கு அடியெடுத்து வைக்கிறீர்கள். இளமை என்றால் ஆற்றல். இது வேகம், திறமை மற்றும் அளவுடன் வேலை செய்யும் திறனைக் குறிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், வேகத்திலும் அளவிலும் உங்களைப் பொருத்துவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம். இதன் மூலம் நாங்கள் உங்களுக்குப் பயனளிக்க முடியும்.” என்றார்.

“கடந்த 10 ஆண்டுகளில், விமான நிலையங்களின் எண்ணிக்கை 74இல் இருந்து கிட்டத்தட்ட 150 ஆக இரட்டிப்பாகியுள்ளது. தமிழ்நாடு துடிப்பான கடற்கரையைக் கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் முக்கிய துறைமுகங்களின் மொத்த சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பாகியுள்ளது.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா முக்கியமான பொருளாதாரங்களுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “இந்த ஒப்பந்தங்கள் நமது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய சந்தைகளைத் திறக்கும். அவை நம் இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

G20 போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துவது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்லது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு பெரிய பங்கை வகிப்பது என, ஒவ்வொரு உலகளாவிய தீர்வின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து!

“நீங்கள் கற்றுக் கொள்ளும் அறிவியல் உங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிக்கு உதவும், நீங்கள் கற்றுக் கொள்ளும் தொழில்நுட்பம் சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க உதவும். நீங்கள் கற்றுக் கொள்ளும் வணிக மேலாண்மையானது வணிகங்களை நடத்தவும் மற்றவர்களுக்கு வருமான வளர்ச்சியை உறுதி செய்யவும் உதவும். நீங்கள் கற்றுக் கொள்ளும் பொருளாதாரம் வறுமையைக் குறைக்க உதவும். ஒரு வகையில், இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரியும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்க முடியும்.” எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

click me!