மனித வயிற்றுக்குள் மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயம் சென்றவுடன் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். கண்கள் தெரியாமல் போகும், காது கேட்காமல் துடி, துடித்து உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலறி துடித்து பலியான உயிர்கள்
விஷச்சாராய மரணம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விஷச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இன்று காலை வரை 36 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது. விஷச்சாராயத்தை குடித்தவர்கள் துடி,துடித்து அலறியபடியே பலியாகியுள்ளனர். எனவே மனித உயிரை காவு வாங்கிய விஷச்சாரயத்தில் தடை செய்யப்பட்ட மெத்தனால் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
சாராயத்தில் மெத்தனால்
இந்த மெத்தனால் எங்கிருந்து கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு கிடைக்கிறது என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளில் மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் கள்ளச்சாராய வியாபாரிகள் கள்ளத்தனமாக மெத்தனாலை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும்.
குடல் வெந்து, நரம்பு மண்டலம் பாதிக்கும்
தடை செய்யப்பட்ட மெத்தனால் அதிகளவு போதை தரும். அதே நேரத்தில் மனித உயிரையே பறித்து விடும்,தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் ஏற்படும். விஷச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் மனித உடலுக்குள் சென்றதும் ஏற்படும் கொடூர மாற்றங்கள் என்ன என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள்.
துடி,துடித்து பலி
அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். கண் தெரியாமல் போகும், காது கேட்காமல் போதும் இறுதியில் மரணம் ஏற்படும் என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.