Kallakurichi Liquor Issues : விஷச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான் நிலையில் வீட்டிலேயே பதுங்கி இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், வீடு, வீடாக மருத்துவ குழு சோதனையை தொடங்கியுள்ளது.
உயரும் கள்ளச்சாராய மரணம்
தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக்கிய விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33யை தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என அச்சப்படவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இன்று காலை வரை 33 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தயார் நிலையில் மருத்துவர்கள்
விஷச்சாராயத்தில் அதிகளவு மெத்தனால் கலந்து கொண்டுவந்து விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் காவல்துறை மூலம் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து காவல்துறையின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், திருச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து போதிய மருத்துவக் குழுக்களை வரவழைத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிகழ்வு காவல்துறையின் கவனக் குறைவால் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 10 காவல்துறை அலுவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வீடு, வீடாக சோதனை
மேலும் விஷச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு வராமல் வீட்டிற்குள் இருந்து விட்டு கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு விஷச்சாராய அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படின் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியிருப்பின் உடனடியாக செல்ல 32 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் பிரேதப் பரிசோதனை செய்து, உறவினர்களிடம் வழங்க 4 அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.