
SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை அதிமுக ஆதரித்து வருகிறது. இதை ஆதரிப்பது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெள்ளத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களியம் பேசிய இபிஎஸ், ''இந்தியாவில் சுமார் 22 ஆண்டு காலம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ளவில்லை. 8 முறை SIR பணிகள் நடந்துள்ளன.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் இறந்தவர்கள் இருக்கின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றனர். இதேபோல் வீடு மாறி ஒரு நகரத்தில் வேறு நகரத்துக்கு சென்றவர்கள், வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுக் கொண்டே வருகிறது.
இப்படி முறைகேடாக உள்ள வாக்காளர்கள் விடுவிக்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் SIR பணிகள் முக்கியம் என்று சொல்கிறோம். ஆனால் திமுக இதை எதிர்க்கிறது.SIR என்று சொன்னாலே திமுகவினர் அலறுகின்றனர்; பதறுகின்றனர். அது என்னவென்று தெரியவில்லை. SIR பணிகளை மேற்கொள்ள காலம் போதாது என்று திமுக சொல்கிறது. ஒரு மாத காலம் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் ஐந்தே நாட்களில் தேர்தல் ஆணையம் பூத் சிலிப் கொடுக்கிறது.
கள்ள ஓட்டு போட திமுக திட்டம்
ஒரு பாகத்தில் அதிகப்பட்சமாக 300 வீடுகள் தான் இருக்கும். ஆகவே அதிகப்பட்சம் 8 நாட்களுக்குள் அனைத்து வீடுகளுக்கும் SIR படிவத்தை கொடுத்து விடலாம். இதை திரும்ப வாங்கி தேர்தல் அதிகாரியிடம் கொடுப்பதற்கும் போதுமான கால அவகாசம் உள்ளது. இறந்தவர்களின் பெயர்களும், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தால் திருட்டு ஓட்டு போடலாம் என்று கருதியே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றன.
மக்களிடம் தவறான தகவல் பரப்புகிறார்கள்
ஒவ்வொரு கட்சிக்கும் பி எல் ஓ 2 உள்ளனர். அவர்கள் தேர்தல் ஊழியர்களுடன் வீடு வீடாக சென்று SIR பணிகளை கண்காணிக்கலாம். அதற்கும் தேர்தல் ஆணையம் இடம் கொடுத்துள்ளது. பிறகு எப்படி தவறு நடக்கும்? இப்படி இருக்கும் நிலையில், திமுகவும், கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு மக்கள் மனதில் தவறான தகவலை பரப்புகின்றன. இறந்தவர்களை ஓட்டுகளை நீக்குவதில் என்ன தவறு உள்ளது? சென்னையில் கள்ள ஓட்டு போட்ட திமுகவினரை அதிமுகவின் ஜெயக்குமார் கையும், களவுமாக பிடித்தார்.
உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?
தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். தகுதியானவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. SIR வந்தால் மக்களின் வாக்குரிமை பறிபோய் விடும் என்ற தவறான தகவலை திமுக பரப்பி வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. SIR தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக தெரிவித்த தவறான தகவலை சரி செய்யவே நாங்களும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.