கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் பலியாகியுள்ள நிலையில், மகேஷ்குமார் அகர்வாலின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
தமிழக காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? அவரது பின்னணி என்ன என்பதைப் இப்போது பார்க்கலாம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் ரூ.5.78 கோடி பணம் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையின் படைதான் விசாரணை நடத்தியது. தொழில்நுட்ப உதவியுடன் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, சென்னையில் பெண் இன்ஜினீயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு போன்ற தமிழ்நாட்டை அதிர வைத்த வழக்குகளில் மகேஷ்குமார் அகர்வால் விசாரணை நடத்தியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் 1972ஆம் ஆண்டு பிறந்தார். தனது தந்தையைப் போலவே சட்டம் படித்துவிட்டு, காவல்துறை பணிக்கு வந்தவர் மகேஷ்குமார் அகர்வால். 1994ஆம் ஆண்டு தன்னுடைய 22 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று ஐபிஎஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்... வீடியோவைப் பார்த்து தமிழக அரசைக் கண்டித்த நீதிபதி புகழேந்தி!
தமிழ்நாட்டில் முதலில் தேனி எஸ்பியாக பணியாற்றி, பிறகு தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாறினார். 2001ஆம் ஆண்டு சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கினார். அங்கு சென்னை பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அடுத்து போக்குவரத்து பிரிவில் துணை கமிஷனரானார்.
பிறகு சிபிஐ அதிகாரியாக 10 வருடம் பல மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பும் பெற்றார். பிறகு மீண்டும் சென்னைக்குத் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாக பணியைத் தொடர்ந்தார். பின்னர், மதுரை கமிஷனராகவும் சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றினார்.
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில் சென்றால், அவரது பொறுப்பை கவனிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக மாறினார். கோவிட்-19 தொற்று பெருந்தொற்று காலத்தில் கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டிருந்தார்.
2020ஆம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டபோது, ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கமிஷனராக நியமிக்கப்பட்டார். பின், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் ஏ.டி.ஜி.பி. மாற்றப்பட்டார். இப்போது, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் பலியாகியுள்ள நிலையில், மகேஷ்குமார் அகர்வாலின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
மைக்ரோசாஃப்ட், கூகுள் குரோம் பயனர்களைக் குறிவைக்கும் புதிய மால்வேர் தாக்குதல்!