
அவர் எழுதிய மடலில்.. "உயர்திரு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக மிகுந்த மன வேதனையுடனும், சோகத்துடனும் இந்த மடலை எழுதுகிறேன். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கின்ற இடத்தில் விலை மதிப்பில்லாத 36 உயிர்கள் பறிபோயுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 90 பேரில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்".
"மேலும் கடந்த மே மாதம் 2023ம் ஆண்டு, இதேபோல தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 23 அப்பாவி உயிர்கள் பரிபோனது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கள்ளச்சாராயம் காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முழு காரணமும் தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட முன்னேற்ற கழக அரசு தான்".
"அண்மையில் சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்யும் கும்பல்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் நபர்களுக்கும் அதிக சம்பந்தம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் அருகே இந்த கள்ளச்சாராயங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது."
"கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உட்கொண்டு இறந்தவர்களுடைய குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, தங்கள் ஊரில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களிலேயே கள்ளச்சாராயணங்கள் விற்பனை செய்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து அப்பகுதியில் இருக்கும் காவலர்களுக்கு தெரிந்தே தான் இந்த அசம்பாவிதங்கள் நடந்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது."
"ஆகவே தமிழகத்தில் தற்பொழுது நிலவிவரும் திமுகவின் மோசமான ஆட்சியை எதிர்த்து தமிழக பாஜக சார்பாக உடனடியாக இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்த ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்", என்று தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கள்ளச்சாராய மரணம் எதிரொலி: ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!