அமைச்சர் பொன்முடி தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழக்க காரணமான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் உட்பிரிவை நீக்கி உத்தரவை பெற்றவர் லில்லி தாமஸ்
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை உடனடியாக இழந்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (1951) 8ஆவது பிரிவின் உட்பிரிவுகள் (1), (2), மற்றும் (3) இன் கீழ் நாடாளுமன்றம் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அந்தத் தண்டனையின் விளைவாக அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்களால் போட்டியிட முடியாது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக அவர்கள் தொடர முடியும்.
undefined
இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா என பலர் தங்களது பதவியை இழந்துள்ளனர். அந்த வரிசையில் பொன்முடியும் சேர்ந்துள்ளார்.
இதற்கு முக்கிய மறைந்த பெண் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான லில்லி தாமஸ் என்பவர்தான். இவர் தொடர்ந்த வழக்கில்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8ஆவது பிரிவின் உட்பிரிவான (4) நீக்கப்பட்டது. அதற்கு முன்பு அதாவது 2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றால், அவர்கள் 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து விட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (4)இன் கீழ் பதவி இழக்க மாட்டார்கள். இதனை பயன்படுத்தி நாடு முழுவதும் பலர் தங்களது பதவியை தக்க வைத்து வந்தனர்.
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும்: என்.ஆர்.இளங்கோ நம்பிக்கை!
இந்த உட்பிரிவை ரத்து செய்யக் கோரி 2013ஆம் ஆண்டில் பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ் தனது 85ஆவது வயது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் எஸ்.ஜே.முகோபாதயா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவின் உட்பிரிவு (4) அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், இதனை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்றும் தீர்ப்பளித்தது. தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரின் பதவி 8 (4) மூலம் இனி பாதுகாக்கப்படாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேல்முறையீடு செய்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் மட்டுமே உறுப்பினரது பதவி தப்பும் எனவும் அந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம், கிரிமினல் குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக பதவி இழக்கும் நிலையும், தண்டனை காலம் முடிந்த பிறகு 6 ஆண்டுகள் தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டது. வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த முக்கிய தீர்ப்பௌ வென்றெடுத்த லில்லி தாமஸ், கடந்த 2019ஆம் ஆண்டு தனது 91ஆவது வயதில் காலமானார்.
முன்னதாக, அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், மேல்முறையீட்டு விசாரணையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் பொன்முடிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.