பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும்: என்.ஆர்.இளங்கோ நம்பிக்கை!

By Manikanda Prabu  |  First Published Dec 21, 2023, 1:48 PM IST

அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்


தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Tap to resize

Latest Videos

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொன்முடி, அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி இழந்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.இளங்கோ, “அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். மேல்முறையீட்டு விசாரணையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் பொன்முடிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும். மேல்முறையீட்டில் அவர் விடுவிக்கப்படுவார் என நம்புகிறோம்.” என்றார்.

“குறித்து நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை அந்த சந்தேகத்தின்  காரணமாகவே உயர் நீதிமன்றம் விடுதலையை ரத்து செய்தது. ஆதாரங்கள் அடைப்படியில் நிச்சயம் இந்த வழக்கில் வெற்றியடைவோம். திமுக பலமாக உள்ளது அதை பார்த்து பாஜக பயப்படுகிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது என சுட்டிக்காட்டிய என்.ஆர்.இளங்கோ, “நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். பொன்முடி வழக்கில் சொத்துகளை முடக்கும் கோப்புகளை அவர் கையாண்டுள்ளார். இதனை Latent Bias என சட்ட முறையில் கூறுவார்கள். இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். ‘நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்’ என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்.” என்றும் தெரிவித்தார்.

Breaking News : ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)இன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால், தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை உடனடியாக பொன்முடி இழந்துள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே, தகுதியை இழக்கிறார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!