எப்போதான் தண்ணீர் தருவீங்க? அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்…

First Published Dec 8, 2016, 11:04 AM IST
Highlights


அரூர்,

எப்போதுதான் முறையான குடிநீர் வழங்குவீர்கள்? என்று காலிக்குடங்களுடன் மக்கள் கொங்கவேம்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம் கொங்கவேம்பு ஊராட்சிக்கு உட்பட்டது பழைய கொங்கம். இந்த கிராமத்தில் 130-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்த கிராமத்திற்கு போதிய குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால், கோபமடைந்த மக்கள், எப்போதுதான் முறையான குடிநீர் வழங்குவீர்கள்? என்று நேற்று காலிக்குடங்களுடன் கொங்கவேம்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்த அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், காவல் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் அதிகாரிகள், காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பழைய கொங்கம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பெண்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

click me!