தமிழக வெற்றி கழகம்: அறிக்கை மூலம் விஜய் என்ன சொல்கிறார்?

By Manikanda Prabu  |  First Published Feb 2, 2024, 4:11 PM IST

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது அறிக்கை மூலம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்


நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என விஜய் பெயரிட்டுள்ளார். கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Videos

இதுதவிர தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது அறிக்கை மூலம் பல்வேறு விஷயங்களையும் தெரிவித்துள்ளார்.

கட்சிப் பெயரில் கழகம்


முதலில் அவரது கட்சியின் பெயர். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு விஜய் பெயரிட்டுள்ளார். ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என பாஜக தொடர்ந்து சூளுரைத்து வரும் நிலையில், தனது கட்சியில் கழகம் என்ற பெயரை சேர்த்துள்ளார் விஜய். தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகளின் பெயரில் கழகம் என்றே இருக்கும். பேரறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பித்தபோது, தனது கட்சிப் பெயரில் திராவிடமும், கழகமும் கண்டிப்பான இருக்க வேண்டும் என்றார். பெரியாரும் கூட தனது இயக்கத்துக்கு திராவிடர் கழகம் என்றே பெயரிட்டார். இதற்கு முன்பு பல்வேறு கழகங்கள் தமிழ்நாட்டில் இருந்தன.

தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.6,331 கோடி நிதி: மற்ற மாநிலங்களை விட குறைவு - என்ன காரணம்?

இப்படி, கழகம் என்ற பெயர் தமிழ்நாட்டு சூழலுடன் தவிர்க்க முடியாதது. கழகம் என்பதற்கு கூடி பயிலும் இடம், ஒன்றாக கூடி காரியங்கள் செய்யும் இடம் என பல அர்த்தங்கள் உள்ளன. பல்கலைக்கழகம் கூட அப்படித்தான். கழகம் என்பது சங்கம் என்றும் பொருள்படும். ஆனால், சங்கம் என்பது சமஸ்கிருதம் சார்பு என்பதால் அதற்கு இணையாக கழகம் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள்.

முற்காலத்தில் தமிழ்ச் சங்கங்களுக்கு கழகம் எனப் பெயர் இருந்தது. அதாவது முதற்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் என அழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். சங்க இலங்க்கியங்கள் கூட கழக இலக்கியங்கள் என அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். எனவே, தூய தமிழ்ச் சொல்லே கழகம். குறிப்பாக, தென்னிந்தியாவைக் குறிப்பதற்கும் கழகம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

 

pic.twitter.com/ShwpbxNvuM

— TVK Vijay (@tvkvijayoffl)

 

கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை


நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயரில் திராவிடம் என்ற சொல் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்களை சந்தித்த நடிகர் விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிங்க என்று அறிவுரை வழங்கினார். எனவே, தமிழ்நாட்டின் கொள்கை நாடியான திராவிட அரசியலை அவர் முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரியார் முன்னெடுத்த திராவிடத்தை தனது கட்சிப் பெயரில் விஜய் சேர்க்கவில்லை. அதேசமயம், தமிழ்நாடு மக்கள், தமிழ்நாடு சார்ந்த கொள்கைகள் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆரியம் vs திராவிட அரசியல் பேசப்போகிறாரா? அல்லது தமிழகத்தை கட்சியின் பெயரில் சேர்த்துள்ளதால் தமிழ்தேசிய அரசியல் பேசப்போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக, திமுக, பாஜக எதிர்ப்பு; மாநில உரிமை பேசும் விஜய்


தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம் என மாநிலத்தில் ஆளும் திமுகவையும், முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுகவையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் மறைமுகமாக எதிர்த்துள்ளார் நடிகர் விஜய்.

மக்களவை தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை - த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டம்!

மேலும், தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து இயங்க வேண்டும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம், மாநில உரிமைகளை அவர் உரக்க பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இன்றைய அரசியல் சூழலில், மாநில உரிமைகள் பற்றியும் தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

அதேசமயம், தமிழக வெற்றி கழக கட்சித் தலைவர் விஜய் தனது அறிக்கையில் பல இடங்களில் உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய, திருவள்ளுவரை மேற்கோள் காட்டியுள்ளார் என்பதும் கவனிக்கத்தகக்து.

சினிமாவுக்கு முழுக்கு


அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி என்று தெரிவித்துள்ள நடிகர் விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படத்தை முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசியலில் ஒரு கால் சினிமாவில் ஒரு கால் என்று இல்லாமல் முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளது நேர்மறையாக பார்க்கப்படுகிறது.

click me!