வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவலையடுத்து, பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் “க்யூலெக்ஸ்” எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை. 1937ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் உகாண்டாவில் இந்த வகை பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் 2011ஆம் ஆண்டு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2019ஆம் ஆண்டில் அம்மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவனை வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பலிகொண்டது.
இதனிடையே, கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல் அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வருகிறது. அதற்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவலையடுத்து, பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் காணப்படுவது இல்லை.காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
West Nile Virus; கேரளாவில் இருந்து தமிழகம் வரும் 13 வழித்தடங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரம்
ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் ஏற்படலாம். மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம்.
அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, கழுத்து விரைப்பு, மயக்கம், பலவீனம், பக்கவாதம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் கட்டாயம் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.